பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடரும்: கலாநிதி ஜே.கெனடி
[ வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2012, 05:45.12 PM GMT ], Tamilwin
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 74 நாட்களாக மேற்கொண்டுவரும் போராட்டங்கள் தமது கோரிக்கைகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் வரை தொடரும் என கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஜே.கெனடி தெரிவித்தார்.
ஐந்து கோரிக்கைகளில் மாணவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளே அதிகம் என தெரிவித்த அவர், இது எமது போராட்டம் என்பதை விட கல்விச் சமூகத்தின் போராட்டமாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஜே.கெனடி, செயலாளர் கலாநிதி எம் பக்திநாதன், சிரேஸ்ட உறுப்பினர்களான கலாநிதி ரி.ஜெயசிங்கம், கலாநிதி கே.ஜெயசங்கர், விரிவுரையாளர் எம்.ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த கலாநிதி கெனடி,
“இலங்கையின் கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கையை உடன் அமுல் படுத்த வேண்டும், பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
வெளிநாட்டவர்களுக்கான புலமைப்பரிசில்களுக்காக ஒதுக்கப்படும் அதிகளவான நிதியினை எமது நாட்டு மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம், பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எங்களது தொழில் சங்கப் போராட்டம் கடந்த 74 நாட்களாக நடைபெற்று வருகிறது.
மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்தல், சம்பள பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட எமது முக்கிய கோரிக்கைகள் உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவைகளாகக் காணப்படுகின்றன.
2011ஆம் ஆண்டின் இடைக்கால தீர்வின்படி எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என எமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒழுங்கில் நாங்கள் எங்களது போராட்டத்தினை முன்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஒரு கொள்கை மட்டத்திலான ஆவணத்திலான தீர்வினை விடவும், சம்மேளனத்தின் கோரிக்கைகளுக்கான உறுதியான தீர்வு கிடைக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.
கல்வியியலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 8 தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சம்மேளனத்திற்கு கிடைத்தது எனவும் இப்பெறுபேறு குறித்து, சம்மேளம் ஏமாற்றமடைந்துள்ளது.
எமது தொழிற்சங்க போராட்டத்தினை அரசாங்கம் சுயநல போராட்டமாக சித்திரிக்க முனைகின்றது. இது எங்கள் சம்பளத்தை மட்டு அடிப்படையாக கொண்ட போராட்டம் அல்ல. இது மாணவர்களின் கல்வியை முதல் படியாகக் கொண்டே எமது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
எமது ஐந்து கோரிக்கைகளில் ஐந்தாவது கோரிக்கையாகவே சம்பளக் கோரிக்கையுள்ளது. ஏனையவை அனைத்தும் மாணவர்கள் சார்ந்தவையாகவே உள்ளது. நாங்கள் எதிர்கால மாணவர்களின் நலன்கள் தொடர்பில் சிந்திக்கின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ளவர்கள் என நம்புகின்றோம் என்றார்.
இதேவேளை இங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி ரி.ஜெயசிங்கம்,
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதலிக்கப்பட வேண்டியது.
ஏனெனில் கொள்கைரீதியான பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தர் நியமிப்பது பொருத்தப்பாடற்றதாக இருக்கும். நாங்கள் கல்வியியளாளர்கள் என்ற அடிப்படையிலும் தொழிற்சங்க ரீதியிலுமே எமது போராட்டத்தினை நடத்தி வருகிறோம்.
இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்மானது, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும், பல்கலைக்கழகங்களைப் பாதூக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள், பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேலைத்திட்டம் என தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.