பல்கலைக்கழக செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முயற்சி; படைத் தளபதியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு; எதிர்ப்பும் கிளம்பியது
http://onlineuthayan.com
 
                            
                          
                            
                
       
              
 
 
 
 
 
http://onlineuthayan.com
யாழ்ப்பாணப் 
பல்கலைக்கழகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் 
மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இது தொடர்பான முயற்சிகள் குறித்து 
விசனங்களும் எழுப்பப்படுகின்றன. 
பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் 
நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பில் இராணுவத்தின் 
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியுடன் பேச்சு நடத்த பலாலிக்கு வருமாறு துறைத்
 தலைவர்களுக்குப் பதிவாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைத் 
தலைவர்களுக்கும் இது தொடர்பிலான அறிவித்தல் துணைவேந்தரின் பணிப்பின் பேரில்
 பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது என்று "உதயன்' பத்திரிகைக்கு அறியவந்தது. 
ஆனால், இராணுவத் தளபதியுடன் துறைத் தலைவர்கள் பேச்சு நடத்த வேண்டும் என்ற 
பல்கலைக்கழக நிர்வாகத்தின் எதிர்பார்ப்புக்கு உடனடியாகவே எதிர்ப்புக் 
கிளம்பியுள்ளது.
படைத் தளபதியுடனான பேச்சுத் தொடர்பில் 
கலைப்பீட துறைத் தலைவர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் இந்த 
யோசனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வட்டாரம் "உதயன்' 
பத்திரிகையிடம் கூறின. "தாம் இராணுவத்தினரைச் சந்திக்க வேண்டிய அவசியமே 
இல்லை என அவர்கள் கூறிவிட்டனர்'' என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
மாவீரர் தினத்தைத் தொடர்ந்து கைது 
செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் இன்னும் 
விடுவிக்கப்படவில்லை. அவர்கள் வெலிகந்தவில் புனர்வாழ்வுக்கு 
உட்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுவர் என்று பாதுகாப்புச் செயலர் 
கோத்தபாய ராஜபக்ஷ பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை 
தெரிவித்திருந்தார். அத்துடன் மாணவர்கள் விடுவிக்கப்படுவதற்குக் 
காத்திருக்காமல் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர 
நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். 
இதனை அடுத்தே யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடனான சந்திப்புக்கு துறைத் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
