Saturday, December 15, 2012

மாணவரை உடன் விடுவிக்க பாதுகாப்புச் செயலாளர் மறுப்பு; "கவுன்ஸிலிங்' கொடுக்க வேண்டும் என்கிறார்

onlineuthayan.com


news
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களைவிடுவிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான பயனைத் தரவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவினரிடம் நேரில் தெரிவித்துவிட்டார் என்று நம்பகரமான வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தன.
எனினும் "சில நாள்கள் வைத்து உளவளத்துணை (கவுன்ஸிலிங்) கொடுக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள்'' என்று பல்கலைக்கழக குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது என்று முகாமைத்துவ மற்றும் வணிக பீடாதிபதி க.வேல்நம்பி நேற்றிரவு "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலரைச் சந்தித்த குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். மேலதிக விவரங்கள் எவற்றையும் தெரிவிக்கவில்லை.
மாணவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சியாக துணைவேந்தர் தலைமையிலான குழுவினர் நேற்று பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துப் பேசினர்.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீடாதிபதிகள் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர். நேற்றுப் பிற்பகலில் சந்திப்பு இடம்பெற்றது.
மாணவர்களின் கைதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து குழுவினர் எடுத்துரைத்தனர். மாணவர்களை உடனடியாக விடுவித்து பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப உதவுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்புச் செயலர், "மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்படமாட்டார்கள். 
நீங்கள் பல்கலைக்கழகத்தை இயக்க நடவடிக்கை எடுங்கள்'' என்று பதிலளித்தார் என கொழும்புத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலர் ப.தர்சானந், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ்.சொலமன் ஆகியோர் நவம்பர் மாத இறுதியில் கைது செய்யப்பட்டனர்.
மூன்று வாரங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் கடந்த வாரம் வெலிகந்த முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றன.