Uthayan online
கைது செய்யப்பட்டு
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7
மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு
முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள்
கூறுகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்
வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத்
தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞான பீட மாணவன் எஸ்.சொலமன் ஆகிய நால்வருமே
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வவுனியா அலுவலகத்தில் இருந்து வெலிக்கந்தை
தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
"நேற்றுக் காலை நாம் வவுனியாவுக்குச்
சென்றபோது அங்கு அவர்கள் இல்லை. வெலிக்கந்தைக்கு அவர்கள் கொண்டு
செல்லப்பட்டுவிட்டார்கள் என்று அங்கிருந்த அதிகாரிகள் எமக்குத் தகவல்
சொன்னார்கள்'' என மாணவர்களில் ஒருவரின் உறவினர் தெரிவித்தார்.
மாணவர்கள் வெலிக்கந்தைக்கு
மாற்றப்பட்டதற்கான காரணங்கள் அவர்களது பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ
தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களில் மூவருக்கு எதிராக மூன்று மாதகாலத்
தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த
ஜெயக்கொடி தெரிவித்தார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று நேற்றுத் செய்தி
வெளியிட்டிருந்தது.
"பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது
பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து
வைத்திருக்க முடியும். ஏனைய ஆறு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்
61 பரிவின் கீழ் 72 மணித்தியால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்'' என்றும்
பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய 7
மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். வவுனியாவுக்கு அழைக்கப்பட்ட
மாணவர்களின் பெற்றோர், பல்கலைக்கழகத்தின் சில பீடாதிபதிகள், மூத்த மாணவர்
ஆலோசகர், நலச் சேவைப் பதிவாளர் ஆகியோரிடம் இந்த 7 மாணவர்களும்
ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்றுப் பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த
மாணவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தாங்கள் விடுவிக்கப்பட்ட
விடயத்தைக் கூறிய பின்னர் பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் சென்றனர்.
மருத்துவ பீடத்தைச் சேர்ந்த க.சஞ்சீவன்,
ச.பிரசன்னா, சி.சசிகாந்த, செ.ஜனகன், ரி.அபராஜிதன் மற்றும்
முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த ப.சபேஸ்குமார், விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த
செ.ரேணுராஜ் ஆகியோரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.