இலங்கையில் 3 மாதங்களாக முடங்கியுள்ள உயர்கல்வித்துறை
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 செப்டம்பர், 2012 - 17:49 ஜிஎம்டி, BBC, Tamil
இலங்கையில் கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் உயர்கல்வித்துறை முடங்கிக்கிடக்கிறது.
பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்
மாணவர்கள் என்று உயர்கல்வித் துறையினரின் போராட்டங்கள் மற்றும்
போர்க்கொடிகளால் நாளுக்குநாள் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டு போகின்ற நிலையில்
அரசாங்கமும் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தபாடில்லை.
போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக
அரசாங்கம் நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களை மூடியும் பார்த்தது.
நீதிமன்றங்களை நாடி மாணவர் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க தடையுத்தரவுகளும்
பெற்றது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை.
விடைத்தாள் மதிப்பீடு
இப்போது பள்ளிக்கூட படிப்பை முடித்துக்கொண்டு
பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல காத்திருக்கும் மாணவர்களும் அடுத்து என்ன
செய்வது என்பது தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க வேண்டிய நிலையில்
இருக்கிறார்கள்.
ஏற்கனவே, பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் புள்ளியை
கணிக்கும் முறையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்தப் பிரச்சனை
உயர்நீதிமன்ற தீர்ப்பு வரை சென்றும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
இந்த நிலையில், பள்ளிக்கூடங்களில் கல்விப்
பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக
காத்திருக்கும் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் தொடங்காமல்
காலம் கடந்துகொண்டிருப்பது இன்னொரு பிரச்சனையாக உருவெடுக்கிறது.
இலங்கையில் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும்
ஆசிரியர்கள் மதிப்பிடுகின்ற உயர்தர பாடங்களின் விடைத்தாள்களை மேற்பார்வை
செய்யும் பணியை பல்கலைக்கழக விரிவுரையாளர்களே மேற்கொண்டுவந்தார்கள்.
ஆனால் அரசாங்கத்துடன் ஏற்பட்டுள்ள இழுபறியால்
விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
பங்கெடுக்கமாட்டார்கள் என்று ஃபூட்டா என்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துவிட்டது.
அதற்காக கல்வி அமைச்சர் அழைத்துள்ள முக்கிய
கூட்டத்திலும் பங்குபெற போவதில்லை என்று அந்த அமைப்பின் தலைவர் டாக்டர்
நிர்மால் ரஞ்சித் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமது தொழிற்சங்கப் போராட்டத்தை ஒடுக்குவதன்மூலம்
பிரச்சனையை தீர்த்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சிலர் ஆலோசனை
கூறியிருப்பதாகவும், தமது போராட்டத்தின்மூலம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை
கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது என்று தவறான கருத்து அரசாங்கத்திடம்
இருக்கிறது என்றும் நிர்மால் ரஞ்சித் பிபிசியிடம் கூறினார்.
பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா
ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 20 நாட்களாக
போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதற்குள்ளாகவே பல்கலைக்கழக
விரிவுரையாளர்களும் கடந்த ஜூலை 4-ம் திகதி முதல் 48 கோரிக்கைகளை முன்வைத்து
போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
விரிவடையும் போராட்டம்
அரசுக்கும் அவர்களுக்கும் இடையில் 10
சுற்றுக்களுக்கும் அதிகமான பேச்சுவார்த்தைகள் நடந்து அந்த கோரிக்கைகள்
இப்போது 6 முக்கிய கோரிக்கைகள் என்ற அளவில் நிற்கின்றன.
மொத்த தேசிய உற்பத்தியில் இப்போது இருக்கும் 1.9
வீதத்தை உயர்த்தி, குறைந்தது 6 வீதத்தையாவது நாட்டின் கல்வித்துறைக்கு
ஒதுக்கு என்று கல்வித்துறையினர் கோருகிறார்கள்.
அதேபோல, கடந்த ஆண்டு போராட்டத்தின்போது அரசாங்கம்
அளித்த உறுதிமொழியின்படி, சம்பளத்தை அதிகரிக்குமாறும் பல்கலைக்கழகங்களில்
அரசியல் தலையீடுகளை ஒழிக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
கோருகிறார்கள்.
ஆனால் அதற்கு அரசாங்கம் கொடுத்துவரும் பதில்களும் பல்கலைக்கழக சமூகத்துக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.
இந்த நிலையிலேயே பல்கலைக்கழக பணிப்புறக்கணிப்பு
என்ற அளவில் நின்றிருந்த விரிவுரையாளர்கள் இப்போது நாடுதழுவிய ரீதியில்
தமது பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு போகப்போவதாக அறிவித்திருந்தனர்.
கண்டி, காலி ஆகிய இரண்டு இடங்களில் இருந்தும்
எதிர்வரும் 24ம் திகதி முதல் ஊர்வலம் நடத்தவுள்ள பல்கலைக்கழக சமூகத்தினர்
28ம் திகதி கொழும்பில் கூடி பாரியளவான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட
திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள்
சம்மேளனம், பள்ளிக்கூட ஆசிரியர்கள் சங்கம், உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான
தொழிற்சங்கங்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின்
தலைவர் சஞ்சீவ பண்டார கடந்த மாதத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றைக்
காரணம்காட்டி கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதற்கிடையில் கொழும்பு, ஜயவர்தனபுர, ரஜரட்ட,
கண்டிப் பேராதனை உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் சத்தியாக்கிரக
போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் ஸ்தம்பித்துப்
போயிருக்கின்ற உயர்கல்வித்துறையை மீண்டும் இயங்கச் செய்யும் மிகப் பெரிய
சவால் இலங்கை அரசின் முன்னால் இருக்கிறது.
No comments:
Post a Comment