Wednesday, December 5, 2012

தேவை கருதித்தானாம் இராணுவம் பல்கலைக்குள் நுழைந்ததாம்; கூறுகிறார் ஹத்துருசிங்க

news
 Uthayanonline
பல்கலைக்கழகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும்   27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தேவை கருதியே இராணுவம் உள்நுழைந்ததாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பலாலியில் அமைந்துள்ள யாழ். கட்டளைத் தளபதியின் தலைமையகத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பொன்று கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

27ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில்  4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மருத்துவ பீடமாணவன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய 3 மாணவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் உள்வாங்கி அவர்களது விசாரணைகள் முடிவடைந்ததும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர்.

மேலும்  அவர்களது விடுதலை பற்றி பல்கலைக்கழக நிர்வாகம் எம்மிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளது. குறித்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி விரைவில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் சம்பவம் நடைபெற்ற தினம் இராணுவத்தினர் பல்கலைக்குள்ளே தேவைகருதி உள்ளே வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் பொலிஸாரோ அல்லது இராணுவமோ முன் அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்குள் நுழையாது. எனினும் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளரின் அனுமதியைப் பெற்றே இவர்கள் உள்ளே வருவார்கள் என்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைளுக்கு இராணுவத்தினரால் எந்த இடையூறும் ஏற்படாது. அத்துடன் பல்கலை சூழலில் இருக்கின்ற இராணுவம் மற்றும் வீதித்தடைகள் என்பன உடனடியாக அகற்றப்படும்.

அத்துடன் மாணவர்களது பாதுகாப்பில் இராணுவம் மற்றும் பொலிஸாரும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர். அதனால் வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நடைபெறக் கூடாது என விரும்புகின்றோம்.

இருப்பினும் பொலிஸார் பல்கலைக்கு அப்பால் தமது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மாவீரர் நாள் நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டவர்கள் என்று என்ற குற்றச்சாட்டில் 4 மாணவர்களையும் கைது செய்தது பொலிஸார் ஆனால் அதற்கான பதில்களைக் கூறுவது இராணுவமாக உள்ளது. இன்றைய தினம் குறித்த சந்திப்புக்கு பொலிஸ் தரப்பில் இருந்து யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.ஏன் பொலிஸ் தரப்பினர் அழைக்கப்படவில்லை என்று கேட்டதற்கு அவர்களுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றதாக கூறப்பட்டது.

அத்துடன் கைதான மாணவர்களில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன் விடுதலை செய்யப்படும் போது ஏன் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதலை செய்யப்படவில்லை? விசாரணை என்பது எதுவரை நீண்டுள்ளது? மற்றைய மாணவர்களுக்கு விசாரணை முடியவில்லை முடிந்ததும் விரைவில் விடுதலை  செய்யப்படுவர் என பொலிஸாருடைய வேலையையும் சேர்த்துச் செய்கிறார் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி.

மேலும் பாதுகாப்புக்கருதி பல்லைக்கழக சூழலுக்கு அப்பால் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நோக்கும் போது யாழில் பொலிஸாரைவிட இராணுவத்தினுடைய ஆதிக்கமே வலுவான நிலையில் உள்ளது என்பதுடன் இராணுவ ஆட்சி யாழில் உள்ளது என்ற கருத்தையும் ஆணித்தரமாக்குகின்றது.

இருப்பினும் சம்பவ தினத்தன்று இராணுவத்தினர் பல்கலைக்கழகத்திற்குள்ளோ அல்லது விடுதிக்குள்ளோ  உள் நுழையவில்லை பொலிஸாரே கடமையில் ஈடுபட்டனர் என்று கூறிய ஹத்துருசிங்க இன்று தேவை கருதியே பல்லைக்குள் இராணுவம் உள் நுழைந்தது என்ற கருத்தை தன்வாயாலேயே கூறி தான் கூறியது பொய் என நிரூபித்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு பொருத்தமானவர் கட்டளைத் தளபதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்துடன் அரசியல் தலையீடு பல்கலைக்கழகத்திற்குள் வேண்டாம் அவர்கள் அனுமதி இன்றி உள்நுழையக் கூடாது எனின் இன்றைய சந்திப்புக்கு எதற்காக இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டிருந்தார் என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே அமைகின்றது.

குறிப்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் மூன்று மணித்தியாலத்திற்கு மேற்பட்ட கலந்துரையாடல் ஊடகவியலாளர்களுக்கு 10 நிமிடம் கூட கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக் கூடிய விடயமாகும்.

இந்த சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment