Sunday, October 28, 2012

பல்கலையை உலுப்பி எடுக்கும் அரசியல் தலையீடு,
 http://onlineuthayan.com/ news
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு கணினி பிரயோக உதவியாளர்கள் மற்றும் எழுதுவினைஞர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் அரசியல் தலையீடு காரணமாக நேற்று மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனை எதிர்த்து பீடாதிபதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
"தியேட்டரில் இருந்து காலையில் கிடைத்த உத்தர வுக்கு அமைய நியமனப்பட்டியல் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது'' என்று நம்பகமான தகவல்கள் உதயனுக்குத் தெரிவித்தன.
இந்த விடயத்தில் தீர்மானகரமாக, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி முடிவு எடுக்கக் கூடியவரான துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் எதுவும் பேசாமல் வாளாவிருந்தார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
நேற்று நடைபெற்ற, பல் கலைக்கழகத்தின் மாதாந்தப் பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பத்திரங்களும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் கூட்டம் ஆரம்பமான பின்னரும் அது கூட்டத்தில் முன்வைக்கப்பட வில்லை. 
கல்விசாரா ஊழியர்களின் நியமனங்கள் குறித்த விடயம் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போது, பீடாதிபதிகள் இந்த நியமனம் பற்றிக் கேள்வி எழுப்பினர். ஆனால் "காலையில் அமைச்சரிடமிருந்து வந்த உத்தரவை அடுத்து இந்த நியமனப் பட்டியல் பேரவையின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவில்லை'' என்று பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம். பதவி நிலை வழியாக அவரது செயலராகப் பதிவாளர் பணியாற்றுகிறார். இருப்பினும் இந்தக் கூட்டத்தில் நியமனப் பட்டியலை முன்வைக்கத் தான் அனுமதி வழங்கியிருந்தார் என்றும் அதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.
இந்த விடயத்தை பேரவையின் முடிவுக்கு விட்டுவிடுவதாகவும் அவர், பந்தைத் தள்ளிவிட்டார். இதனை தொடர்ந்து காரசாரமான வாதங்கள் இடம்பெற்றன. பேரவையின் முடிவுக்கு விடுவதாகத் துணைவேந்தர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது என்று பீடாதிபதிகள் வாதிட்டனர்.
அதேநேரத்தில் பேரவைக் கூட்டத்தில் வாய் மொழி மூலமான உத்தரவுகளைச் செயற்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய பீடாதிபதிகள், அமைச்சரின் உத்தரவு எழுத்தில் இருந்தால் அதனைக் காட்டுமாறு கோரினர். 
ஆனால், அத்தகைய உத்தரவுகள் எவையும் எழுத்து வடிவில் இல்லை என்றும் காலை 8 மணிக்கு தொலைபேசி வழியாகவே வழங்கப்பட்டது என்றும் பதிவாளர் பதிலிறுத்தார். 
அமைச்சரும் ஆளுநரும் இவ்வாறு வாய்மொழி உத்தரவுகள் பலவற்றையும் இடும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்று தெரிவித்த, கூட்டத்திலிருந்த அரசியல் வழி நியமனங்களான பேரவை உறுப்பினர்கள் சிலர், அவ்வாறான வாய் மொழி உத்தரவுகளை ஏற்றுச் செயற்படுத்தலாம் என்று வக்காலத்துப் பாடினர். 
இதனைத் திட்டவட்டமாக மறுத்த பீடாதிபதிகள், பல்கலைக்கழக நிர்வாகம் என்பது சட்டங்களையும் அமைச்சின் சுற்றறிக்கைகளையும் மதித்தே நடத்தப்படுகின்றது; நடக்கின்றது என்று அழுத்திக் கூறியதுடன் வாய் மொழி மூலம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உறுதியாக நின்றனர். 
இதற்கு இணங்க மறுத்த, அரசியல் நியமன பேரவை உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை அடுத்து பீடாதிபதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். விஞ்ஞான பீடாதிபதி கே.கந்தசாமி மற்றும் கலைப் பீடாதிபதி வி.பி.சிவநாதன் ஆகியோர் முதலில் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய பீடாதிபதிகளும் வெளியேறினர். 
ஆனால் அவர்கள் சமாளிக்கப்பட்டு மீண்டும் தமது ஆசனங்களுக்கு திருப்பப்பட்டனர். 
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருடன் பேசி, இந்தப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக பேரவை உறுப்பினரான முன்னாள் துணைவேந்தர் சமாளித்தார். 
இவர் கடந்த கூட்டத்தின் போதும் இப்படித்தான் தெரிவித்தார் என்று பேரவை உறுப்பினர்கள் சிலர் உதயனிடம் சுட்டிக்காட்டினர். "அமைச்சருக்கு நெருக்கமான  புலிகளின் ஆதரவாளர்களால் வடமராட்சி சுடலை ஒன்றில் வைத்து நையப்புடைக்கப்பட்ட அதிபர் ஒருவரின் புதல்விக்கு இந்தப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததன் காரணத்தால்தான் இவை தடுத்து நிறுத்தப்படுகின்றன'' என்று பேரவை உறுப்பினர் ஒருவர் உதயனிடம் தெரிவித்தார். 
இருப்பினும் கடந்த மாத இறுதியில் தியேட்டருக்குச் சென்று அமைச்சரைச் சந்தித்துப் பேசிய பீடாதிபதிகள் இந்த விவகாரத்தை எடுத்து விளக்கியிருந்தனர். 
அதற்கு, தான் அதற்காக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கவில்லை என்று பதிலளித்திருந்த அமைச்சர், தனது ஆதரவாளர்கள் பலருக்கு நியமனம் கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே தான் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தார் எனச் சப்பைக் கட்டுக் கட்டியிருந்தார்.

No comments:

Post a Comment