Sunday, December 9, 2012

"கைதான மாணவர்கள் ஆபத்தில்" - யாழ். ஆசிரியர்கள் கடிதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 டிசம்பர், 2012 - 11:47 ஜிஎம்டி
BBC Tamil
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது அண்மையில் பொலிசார் தடியடியும் நடத்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது அண்மையில் பொலிசார் தடியடியும் நடத்தியிருந்தனர்.

வட இலங்கையில் இருந்து பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிசாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்து அப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியல் பிரச்சினைகளை வலுக்கரம் கொண்டு நசுக்க அதிகாரிகள் முனைகிறார்கள் என்றும், பொய்யான காரணங்களைக் காட்டி ஆட்களைக் கைதுசெய்கின்றனர் என்றும் ஆசிரியர்கள் இக்கடித்தத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களின் உணர்வுரீதியான தலைமையகமாக விளங்கும் யாழ்ப்பாணத்திலே அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று முறையிடுவதாக யாழ். பல்கலைக்கிழக ஆசிரியர்கள் 125 கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள இக்கடிதம் அமைந்துள்ளது.

கிளர்ச்சி படைகள் அழிக்கப்பட்டுவிட்டதாலேயே அவர்கள் உருவாகக் காரணமாக இருந்த உணர்வுகளும் அழிந்துவிடும் என்ற அர்த்தம் இல்லை என்று எழுதியுள்ள ஆசிரியர்கள், பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுவதைக் கோடிகாட்டியுள்ளனர்.
மக்களிடையே காணப்படும் அதிருப்தியையும் எதிர்ப்புணர்வையும் அரசியல் ரீதியாகக் கையாளாமல் பொலிசாரைக் கொண்டு கையாளக்கூடாது என்று இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தைக் அனுசரிக்க சட்டவிரோதமாக முயன்றனர் என்றும் அல்லது அரசுக்கு ஆதரவான கட்சி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர் என்றும் குற்றம்சாட்டின் 11 மாணவர்களை பொலிசார் கைதுசெய்திருந்தனர்.

சிறியதொரு தாக்குதலை சாக்காக வைத்து மாணவர்களைத் துன்புறுத்த முயற்சி நடக்கிறது என்று தாங்கள் நம்புவதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று வராததாலும் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமான இராணுவப் பிரச்சன்னம் காணப்படுவதாலும் எழுந்துள்ள அதிருப்தியால்தான் மாணவர்கள் மாவீரர் தினத்தை அனுட்டிக்க நேர்ந்தது என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment